Saturday, December 22, 2012

இனிஅவன்- சில யதார்த்தங்கள்,நிறைய மிகைப்படுத்தல்கள்

"2009 போருக்கு பின் முகாம்களில் இருந்து வந்த மக்கள், குறிப்பாக புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகளுக்கும் சமூகத்துக்குமான உறவு அண்மையில் உள்ளூரில் இடம்பெற்ற கைதுகள்/கடத்தல்களால் மீண்டுமொரு முறை பெரியதொரு விரிசலை எதிர்நோக்கியிருக்கிறது :( நேற்று ஒருவருடன் உரையாடும்போது புரிந்து கொண்டேன், ஆனால் தற்போதைய நிலையில் சமூகத்தை பிழை சொல்ல முடியாது, அவர்கள் தாமுண்டு தமது வேலையுண்டு என்று இருப்பதாலேயே தற்காலத்தில் நிம்மதியாக வாழமுடியும். அப்பிடியானதொரு வலையே இப்போது எம்மை சுற்றி பின்னபட்டிருக்கிறது :( இக்கட்டான நிலையில் முன்னாள் போராளிகள்:(" இந்த கருத்தை எனது பேஸ்புக்கில் சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். இந்நிலையில் நேற்றுதான் இனிஅவன் வெளியாகிருந்தது, பல நாள்காளாகவே சமூகவலைத்தளங்களில் புனர்வாழ்வு அ(ழி)ளிக்கப்பட்டு வரும் ஒரு போராளியினை சமூகம் எப்பிடி எதிர்நோக்குகிறது என்ற முன்னோட்டங்களும், எல்லா தளங்களையும் தேடி பயணிக்கவேண்டும் என்ற நோக்கில் இலங்கையில் எடுத்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் நேற்று மதியம் ராஜா 2 திரையரங்கில் சென்று பார்த்தேன்.





இதுதான் நான் பார்க்கும் முதல் இலங்கை தயாரிப்பு திரைப்படம், எனக்கு இந்த படத்தை இயக்கிய விருதுகளை பெற்ற அசோக கந்தகமயும் நான் அறிந்திருக்கவில்லை, எனவே நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே படம் பார்க்க சென்றேன், இக்காலங்களில் இப்பிடி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க செல்வதே நன்மை பயக்கிறது, படம் ஆரம்பிக்கும்போதே ராஜா 2 திரையரங்கின் திரையின் 1/4 பங்கு அளவுக்கே படம் காண்பிக்கபட்டது, ஒலியும் சொல்லிகொள்ளும் படியாக இல்லை, இருந்தும் இவை தொழில்நுட்ப பிரிவை சார்ந்தவையே எமது நாடு அந்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லைதானே என்று விட்டு விட்டேன், படம் ஆரம்பித்து இடைவேளை வரை நன்றாகவே சென்றது, எனது வாழ்நாளில் ஓரிரு வருடங்களை யாழ் மண்ணிலையே கழித்தவன் என்ற ரீதியில் முதல் பாதியில் இயக்குனர் காட்டியவை பெரும்பாலும் என் கண்கூடாகவே நிகழ்ந்தவை என்ற ரீதியில் உறுத்தவில்லை. சகோதர மொழி இயக்குனர் ஒருவர் இவ்வளவு ஆழமாக எடுத்திருக்கிறார் என்று பெருமை பட்டுகொண்டேன், இருந்தும் சில காட்சிகள் ஒவ்வாதமையாகவே காணப்பட்டன, படத்தின் நாயகன் சொந்த ஊருக்கு வரும்போது, அந்த ஊரே இப்பிடித்தான் நிண்டு பார்க்குமா? சிரிப்புதான் வந்தது, அடுத்த காட்சியில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தகப்பனின் காட்சி தத்ரூபமாகவே தெரிந்தது, அடுத்தது சாதீய பாகுபாடு அந்த பெண்ணின் தகப்பனின் உருவில் யதார்த்ததைதான் காட்டியிருந்தார்கள், அடுத்து அரை காட்சட்டையுடன் வரும் வெளிநாட்டுகாரன், "நாங்கள் மடையங்கள்" என்று நாயகன் சொல்லும் எல்லாம் அப்பட்டமாகவே தெரிந்தது.



இப்பிடி நன்றாகவே போய்க்கொண்டிருந்த படத்தை இரண்டாம் பாதியின் போது அதல பாதாளத்துக்குள் தள்ளி தானும் அரசுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு இயங்கும் ஒருவன்தான் என்பதை வெளிக்காட்டியுள்ளார் இயக்குனர். முற்றுமுழுதாக இராணுவகட்டுபாட்டுக்குள் இருக்கும் யாழ்ப்பாணத்தில் எப்பிடி இவ்வளவு ஆயுத பாவனை சாதாரணமாக இருக்கிறது? இதற்க்குரிய மூலம் எங்கே எதோடு சம்பந்தபட்டது என்று காட்டவில்லையே இயக்குனர்? நான் எங்கோ வாசிச்சது போன்று ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு இனமக்களை இப்படியானவர்கள் என்று முத்திரை குத்துவதை மதவெறி பிடித்த கிறிஸ்தவ இயக்குனர் மாயன் இனத்தவர்களின் பெருமைகளை எல்லாம் மறைத்து நரமாமிசம் சாப்பிடும் கொடூரர்கள்  என்று காட்டுவதன் மூலம் நிறைய உண்மைகளை மறைத்திருந்தார், அதையே இங்கும் இயக்குனர் மிகச்சரியான உளவியலுடன் கையாண்டிருக்கிறார், இந்த படம் சர்வதேச  விழாக்களுக்கு செல்கிறது அங்கு சர்வேதச சமூகத்துக்கு இந்த படத்தின் மூலம் எடுத்து சொல்லபடும் செய்தி என்னவெனில் அந்த படத்தில் வரும் வசனம் போன்றுஎங்களுக்கு புதிய வாழ்க்கை இல்லை பழையதையே மீண்டும் புதுசா தொடங்குறம் அதாவது தமிழர்கள் 2009 ஆயுத போராட்ட முடிவுக்கு பின்னும் அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது மீண்டும் மீண்டும் ஆயுதகலாச்சாரதுக்குள்ளேயே செல்கின்றனர் என்பதை மிகசரியாக சொல்லுகிறார் அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கும் இயங்குனர்.
                                                                                                                                   மொத்தத்தில் தமிழர்கள் இன்னும் ஆயுத கலாச்சாத்துக்குள் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேச சமூகத்துக்கு கற்பிக்கவே இந்த படம் எடுக்க பட்டிருக்கிறது, மேலும் படத்தின் இறுதி பகுதியில் டிப்பரில் வந்து உதவி கேட்கும் பாத்திரம் மட்டும் சிங்களமாகவும், படத்தின் ஏனைய பாத்திரங்கள் அனைத்தும் தமிழாக இருப்பதன் மூலம் இயக்குனர் சொல்வது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் இல்லை.இரண்டாவது பாதியில் எனக்கு யதார்தமா தெரிந்தது வீட்டு வளவில் புதைச்சு வைப்பதும், நாயகனின் காதலி AK-47 துப்பாக்கி எடுத்து சுடும்போது, இந்திய சினிமா ரேஞ்சுக்கு இல்லாது உண்மையாக ஒரு சாதாரண பெண் துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் உதைப்பு காரணமாக எப்பிடி நிலைதடுமாறுவாள் என்றும் காட்டியிருப்பது மட்டும்தான்.
 


                                       

No comments: