Tuesday, September 24, 2013

எனது பார்வையில் வடக்கு மாகாணசபை தேர்தல்

இலங்கையின் தமிழர்கள் வாழும் வட மாகாணத்தில் 30 வருட ஆயுத போராட்டம் முடிவுற்று 4 வருடங்களின் பின் ஏகப்பட்ட சர்வதேச அழுத்தங்களால் வரலாற்றில் முதல் தடவையாக மாகாண சபை தேர்தல் அறிவிக்கபட்டு கடந்த செப்டெம்பர் மாதம் 21ம் திகதி தேர்தல் நடைபெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறுதிப்பெரும்பான்மையுடன் மாகாணசபையை கைபற்றியிருக்கிறது.
                                             இம்முறை தேர்தல் அறிவிக்கபட்டதில் இருந்து கள நிலவரங்கள் உன்னிப்பாகவே அனைத்து தரப்புகளாலும் அவதானிக்கபட்டு கொண்டிருந்தது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்து கூட்டமைப்பை உருவாக்கினர். எனவே வேறு தெரிவுகளற்ற ஒரே தெரிவாக அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருகிறது. இம்முறை பெறப்பட்ட வெற்றிக்கும் அவர்களின் நிழல்தான் காரணம்.
                    ஆரம்ப காலம் தொட்டே இந்த கூட்டமைப்புக்குள் உட் கட்சி பூசல் நிறையவே இருந்தாலும் அவர்களின் காலத்தில் எல்லாரும் அடக்கியே வாசித்தனர். இப்போது எல்லாம் முடிந்து விட்ட நிலையில் வேட்பாளர் நியமனத்தில் கட்சி பிளவுபடும் நிலைக்கு கிட்ட சென்றது உட்கட்சி பூசல். பின் ஒருமாதிரியாக மாவை சேனாதிராஜா விட்டு கொடுத்து கட்சி நலனுக்காக செயற்றபட விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக வந்தார்.மேல் மட்டங்கள் இப்பிடியே புகைந்து கொண்டிருந்தாலும் கீழ் மட்டங்களில் இது இன்னும் மோசமாக இருந்தது. வல்வெட்டித்துறையில் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது, கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் அங்கு இல்லை, இதுவென்றாலும் பரவாயில்லை இன்னும் கீழ்த்தரமாக நள்ளிரவு வேளைகளில் சுவரொட்டி ஒட்டி பொதுமக்களிடம் கையும் களவுமாக பிடிபட்ட நிலை. இம்முறை எல்லா பேதமைகளையும் மறந்து ஒன்று திரண்டு தமிழரின் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்ற மக்களை பார்த்து திருந்துங்கடா, அடுத்து கூட்டமைப்பின் உயர்பீடங்களும் கண்டும் காணாமல் இருக்காது கடுமையான ஒழுகாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இனி வரும் தேர்தல்களில் இந்த தனிநபர் விருப்பு வெறுப்புகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்து இம்முறை தேர்தலின் போது அவதானித்தது இணையத்தளங்கள், முக்கியமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் குறித்து ஆழமான கருத்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன மிகவும் வரவேற்கபட வேண்டிய விடயம், தாம் வாக்களிக்க போகின்ற அரசியல்வாதிகளை பற்றி விவாதிக்கதொடங்கிவிட்டார்கள், இது அரசியல்வாதிகளுக்கு ஒரு அலாரம்.இனியும் சும்மா போய் வாக்கு மட்டும் அளித்துவிட்டு வரமாட்டார்கள் மக்கள். என்ன செய்திருக்காய் என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள்,  மேலும் இளைய தலைமுறை வேட்பாளர்கள் களத்தில் நின்றதும் மேலும் முன்னேற்றகரமான விடயம், எனது அவா என்னவென்றால் மக்கள் அரசியல்வாதிகள் பற்றி விவாதிப்பது எல்லாம் தொடர வேண்டும் தேர்தலோடு மட்டும் நின்று விடக்கூடாது, அப்போதுதான் உண்மையானவர்கள் இனங்காணப்படுவார்கள்.
                                       

                                                                                                     அடுத்து இம்முறை யாரும் எதிர்பாராத வகையில் 62 சதவிகித வாக்களிப்பு பதிவாகியிருந்தது இதுவே பாரிய வெற்றியாகும் ஏன் நான் சொல்லுகின்றேன் என்று முன்னைய தேர்தல்களில் தமிழர் பகுதிகளில் எவ்வளவு வாக்களிப்பு வீதம் பதிவாகியிருந்தது என்பதை பார்த்தால் புரியும். இது ஒரு வகையில் தேர்தலில் முறைகேடுகள்  செய்யாமல் வெற்றிகரமாக தமிழர் பிரதேசங்களில் தேர்தலை நடாத்தி காட்டியுள்ளோம் என்று அரசாங்கம் பரப்புரை செய்யலாம்.
                                                                                                                 
தமிழ் கூட்டமைப்புதான் வெற்றி பெறும் என்று ஏலவே தெரிந்திருந்தாலும் இந்த வெற்றி எதிர்பார்க்காத அதிரடி வெற்றி 36 ஆசனங்களில் 30 ஆசனங்களை பெறுவது சாதாரணமான ஒன்றல்ல, இந்த வெற்றி நிறைய விடயங்களை அரசாங்கத்துக்கு சொல்லி போயிருக்கின்றது வெறும் கார்ப்பெட் வீதிகளாலும்,புகையிரததாலும் மக்கள் மனதை வென்றுவிடமுடியாது, எதையும் மறக்கவில்லை அனைத்தையும் உள்ளேயே வைத்திருக்கின்றனர் சந்தர்ப்பம் வந்தபோது வாக்கு என்னும் சாட்டையால் ஓங்கி அடித்துள்ளனர். பார்ப்போம் இந்த தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றங்களை கொண்டுவருமா என்று?

                                                                                   அடுத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணை பெரியதொன்றாகும், முன்னரை போன்று சும்மா இருந்து கொண்டு காலத்தை கடத்த முடியாது, ஆக்கபூர்வமான முறையில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். முக்கியமாக காணி அதிகாரங்கள் பெற்றுகொள்ளபடவேண்டும் இல்லையெனில் அடுத்த தேர்தலின்போது குடியேற்ற என்ற பெயரில் வருகின்ற வாக்குகளால் ஆப்பு காத்திருக்கின்றது, மற்றது மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்ற படவேண்டும்.முதலைமச்சர் விக்கினேஸ்வரன் ஆரம்பமே அதிரடியாக புத்திசாலியாக அடித்து ஆடியிருக்கின்றார் பார்ப்போம் பொறுத்திருந்து பார்ப்போம் தனது தொடர்ந்து வரும் நடவடிக்கைகளால் இன்னும் தன்னை நிரூபிக்கின்றாரா என்று?

No comments: